தேவன் எல்லாவற்றையும் படைத்து மனிதனையும் படைத்ததாக வேதாகமம் நமக்குக் கூறுகிறது.
தேவன் நிறைவானவரும், நல்லவருமாயிருக்கிறார். ஆனால் மனிதன் அப்படி நல்லவனல்லன். தேவன் மனுக்குலத்தை, நன்மையையும் தீமையையும் சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கும் திறமையுமுள்ள நல்லொழுக்கத்தின் பிரதிநிதியாகப் படைத்தார். தேவனின் வெளிப்பாடாகிய பரிசுத்த வேதாகமம், நாம் அனைவரும் பாவம்செய்து தேவ மகிமையிலிருந்து குறைந்து விட்டதாகக் கூறுகிறது.
ஒழுக்கத்தின் அடிப்படையான கட்டளைகள் சிலவற்றைக் கூறும் போதும் அதில் ஒரு வகையாலும் மீறாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.
பாவம் கர்த்தரை விட்டு மீறுகிறது. வேறு தெய்வத்தை வணங்குவதோ, கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்குவதன் மூலமோ பாவமாகிறது. தேவனாகிய கர்த்தரிடம் முழு இருதயத்தோடும் அன்பு கூறவேண்டும்
தாயையும் தகப்பனையும் கனம் பண்ண வேண்டும். கொலை செய்வதற்குச் சமமான பகை கொள்ளாதிருக்க வேண்டும். கண்களால் இச்சிக்கிற பாவமாகிய விபச்சாரம் செய்யக் கூடாது. களவு செய்யயக்கூடாது. தவறான எண்ணத்தோடு பிறர் மனைவியையோ, உடைமைகளையோ இச்சிக்கக்கூடாது. இவ்வாறு கட்டளைகளை மீறுவதானால் தேவனை விட்டு நித்தியமாகப் பிரிக்கிறது. அதனால் நாம் வழிதப்பி வேறுபிரிகிறோம். அவர் பரிசுத்தராயிருப்பதால் பரலோகில் பாவத்தோடு யாரையும் வாசம் செய்ய அனுமதிப்பதில்லை. பாவம் செய்தவர் மீது கோபமும் நியாயத்தீர்ப்பும் இறங்குகிறது.
அவியாத அக்கினி அணையாமலும் மிகுந்த உபத்திரவமும் உண்டு என வேதம் சொல்கிறது.
இந்தக் கோணத்தில் பார்த்தால் நமக்கு நம்பிக்கையின்மை தான் பிறக்கும். ஆனால் தேவன்; நமக்கு பாவத்திலிருந்து விடுதலை பெற பாவமற்ற மேசியாவை அனுப்பி இருக்கிறார்.
அவர் தேவனிடம் நமக்காகப் பரிந்து பேசுகிறார். தனது மாம்சீக வாழ்வை தியாகம் செய்து நீதியை நிலை நிறுத்தினார். அவர் மனுக்குலத்துக்காக கர்த்தரோடு சமாதானத்தை ஏற்படுத்தினார். அவர் மரித்தது மட்டுமல்ல, உயிரோடெழுந்தார். இப்போது அவரிடம் நமபிக்கை வைத்திருப்போருக்காக காத்துக் கொண்டிருக்கிறார். மரணத்துக்குப்பின் நம் சரீரம் அவருடைய சமூகத்தில் போய்ச் சேர்ந்து வாழுவதே நித்திய வாழ்வு என்று வேதம் கூறுகிறது.
நாம் பாவத்தை விடுத்து இயேசுவை ஏற்றுக் கொள்ளும் போது அவர் மோட்;சத்தின் ஒரு பகுதியான பரிசுத்த ஆவியை நமக்குள் அனுப்பி கர்த்தருக்குள் சமாதானமாய் வாழ உதவிசெய்கிறார்.
இப்படிப்பட்ட விசுவாசத்தில் வளரும் போது உள்ளான பழைய மனுஷன் தண்ணீரில் அடக்கம் பண்ணப்படுவது போன்ற அனுபவத்துக்கு ஒப்பான முழுக்கு ஞானஸ்தானம் பெற்றுக் கொள்கிறான். ஒருவருடைய உள்ளான இருதயத்தில் கர்த்தர் வந்து வாசம் செய்கிற புதிய வாழ்வைத் துவங்கி அறிக்கை செய்வதாகும்.
இது ஒரு எளிமையான பரிமாற்றமாய்த் தோன்றும். ஆனால் கடைப்பிடிப்பதற்கு மிக ஆழமாய்த் தோன்றும். கர்த்தர் உங்களை நோக்கி ‘வருத்தப்பட்டு பாரஞ் சுமக்கிறவர்களே என்னிடத்தில் வாருங்கள் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்கிறார். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்.
என் நண்பரே, இன்றைய நாளில் அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாமல் உங்கள் வாழ்க்கையை ஆத்துமாவின் மேய்ப்பாராகிய கிறிஸ்துவிடம் ஒப்படையுங்கள்.
அவர் உங்களை நேசிக்கிறார். சொல்லி முடியாத இளைப்பாறுதலையும் சந்தோஷத்தையும் உங்களுக்கு அவர் அளிப்பார். உங்கள் வாழ்வில் புயல்கள் வராது என்ற சொல்லவில்லை. ஆனால் அவர் உங்களை விட்டுவிலகுவதுமில்லை கைவிடுவதுமில்லை. அவரை உங்களுக்கு வெளிப்படுத்தும் படியாக அவரிடம் ஜெபித்து, உண்மையான அன்புடன் அவர் மீது நம்பிக்கை வையுங்கள்.
முழு மனதோடும் உண்மையாக இப்படிச் செய்வதன் மூலம் ஏமாற்றமே அடைய மாட்டீர்கள். கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பார்க்கும்படி உங்களை ஊக்கப்படுத்துகிறோம்.